எல்லாளன் நடவடிக்கை


ellaalan.jpg


இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…! 

எல்லாளன் நடவடிக்கை

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.
 
இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான்.

“எங்களிடம் இருக்கிற ஆயுதமெல்லாம் எதிரியின்ர இலக்குகளை அழிக்கிற ஆயுதங்கள். நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம். நாங்கள் இப்ப உள்ளுக்க போறம். சண்டை பிடிக்கிறம். எதிரியின்ர விமானங்களை உடைக்கிறம். விடுதலைப் புலிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்….” இளங்கோவின் குரல் உறுதியாய் ஒலித்தது.
 
“வீமண்ணை என்ன எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் எம்.ஐ.24 நிக்கிற இடத்துக்கு வேகமாய்ப் போங்கோ. ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம். அப்ப நாங்கள் வெளிக்கிடுவம்.”
 
இளங்கோவின் அனுமதி கிடைத்ததும் எல்லோரும் தங்கள் ஆயுதங்களை இயங்கு நிலைக்கு தயார் படுத்தியபடி உற்சாகமாக நகர தொடங்கினார்கள். இந்த நாளுக்காக அவர்கள் எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். எத்தனை கடின பயிற்சிகளுக்குள் மூழ்கியிருந்தார்கள். எல்லாமே இந்த நாளுக்காகத்தான். சின்னப் பிசகென்றாலும் எல்லாமுமே தலைகீழாக மாறிவிடும். அதனால் பயிற்சி கடுமையாக இருந்தது. யாரும் அசைந்து கொடுக்கவில்லை. பயிற்சிகளால் உடல் களைப்படையும். ஆனால் அவர்கள் சோர்ந்ததேயில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் இலக்கு பற்றியதாகவே இருந்தது. பயிற்சித் தளத்தில் பயிற்சி ஆசிரியரின் சொல்லை அவர்கள் என்றுமே தட்டிக் கழித்ததில்லை. பயிற்சி சிறிது கடுமையாக இருந்தால் தங்குமிடத்தில் ஆசிரியரை அன்பாகக் கிண்டலடிப்பார்கள். அங்கு சிரிப்பொலிகள் எழும். கைகள் ஆயுதங்களைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும். இப்படி கழிந்தன அந்த நாட்கள்.
அமைதியான அந்த இரவில் வண்டுகளின் ரீங்கார ஒலிகளும், சில பறவைகளின் இடைவிட்ட ஓசைகளும் அந்த விமானத் தளத்தைச் சூழ கேட்டுக் கொண்டிருந்தன. இந்த அமைதியைக் குலைக்காதவாறு அவர்கள் அந்தப் படைத்தளத்தின் தடைவேலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் தான் தாக்குதல் நடாத்தும் விதத்தை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தலைவர் அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்ட வரிகள் ஞாபகத்திற்கு வந்தன.
 
“நீங்கள் 21 பேரும் போறியள். நிச்சயம் நிறையச் சாதிப்பீங்கள். எங்களாலையும் செய்யமுடியும் எண்டதை உலகத்துக்கு நாங்கள் காட்டுவோம். உங்கட பேரை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த உலகம் கட்டாயம் உங்கட பேரை உச்சரிக்கும்.” தலைவரின் உணர்வை அவர்கள் நன்கு புரிந்தவர்கள். தலைவருடன் கூடவிருந்து வாழ்ந்தவர்கள். அவரின் ஒவ்வொரு அசைவினதும் அர்த்தத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த வீரர்கள் தலைவரைப் பார்த்து தாங்கள் சாதிப்போம் என்ற உறுதிமொழியை முகத்தில் பூத்த புன்னகைமூலம் காட்டினார்கள். அந்த இடத்தில் “அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?” என இளம்புலி கேட்டான்.
 
“நீங்கள் கொண்டுபோகலாம். அதுக்குத் தடையில்லை. ஏனெண்டா இது முற்று முழுதான இராணுவத் தளம். நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ. ஆனால் ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக்கொள்ளுங்கோ.” தலைவரின் கவனம் அவர்களுக்குப் புரிந்தது.
 
உண்மையில் சிங்களப் படைகளைப் போல் பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள் செல்லவில்லை. அவர்களின் ஓரே மூச்சு, சுதந்திரமான தேசம் தான். அதற்காகத்தான் இவர்கள் வெடிசுமந்து போனார்கள். இந்தக் கரும்புலி அணிக்குள் மூன்று பெண் கரும்புலிகளும் இருந்தார்கள். அவர்களில் அறிவுமலர் என்ற பெண் கரும்புலி மிகவும் இரக்க சுபாவமுடையவள். பயிற்சி நாட்களில் இவளின் தங்ககத்தில் ஒருநாள் தலைக்கு அணியும் சீருடை தொப்பிக்குள் எலிக்குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. எலிக்குஞ்சுகளை இவர்கள் கண்டு விட்டதால் அச்சமடைந்த தாயெலி அங்குமிங்கும் ஒடியபடியிருந்தது. கூட இருந்தவர்கள் அதை வெளியில் விடுவோமென ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள். தாயெலி அதை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி இன்னொரிடத்திற்கு கொண்டு சென்றது. கடைசி எலிக்குஞ்சை தாயெலி காவிச் செல்லும்வரை அவள் காவலிருந்தாள். இத்தனை மென்மையான உள்ளங்களிலிருந்து எதிரிகளை அழிக்க வேண்டுமென மனவலிமை பிறக்கின்ற தென்றால் சிங்களதேசம் எத்தகைய கொடுமைகளை எங்கள் மீது புரிந்திருக்கிறது.
 
நேரம் விடிகாலை 3.00 மணி அமைதியாயிருந்த அந்த தளத்தில் தங்களுக்கு சாதகமான இடத்தில் தடையை அகற்றுவதற்காக தடைவேலியை கரும்புலிகள் அணி நெருங்குகின்றது. கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் சீருடையிலிருந்த பைகளைத் தட்டிப் பார்க்கின்றார்கள். இவர்கள் வன்னித் தளத்திலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நடவடிக்கைகான தளபதியை அவசர அவசரமா அழைத்த தலைவர் “பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?” என்று கேட்டார். “இல்லையண்ணை. இனித்தான்…” “அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச் சொல்லுங்கோ. இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போடுவாங்கள். பிறகு நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள். ஆனபடியா மறக்காம கொண்டுபோகச் சொல்லுங்கோ.”
 
அந்த வீரர்கள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பெரும் இலட்சிய நெருப்பைச் சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்துதான் இந்த மண்ணில் வரலாறாக வேண்டுமென அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதை நன்கு புரிந்து வீரர்கள் இங்கே சாதிக்கும் கணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அனுராதபுர வான்படைத் தளத்தைச் சூழ கோயில் திருவிழாபோல் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக எழிலின்பனும் பஞ்சீலனும் தடையை நெருங்குகின்றார்கள். வேகமாக தங்களிடமிருந்த கம்பி வெட்டும் கருவியால் தடையை வெட்டத் தொடங்குகின்றார்கள். அவர்களிலிருந்து 15 மீற்றரில் இளங்கோ நிலையெடுத்திருந்து அணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். அன்புக்கதிரும் புரட்சியும் தடை அகற்றும் பகுதிக்கு அண்மையாக இருந்த காப்பரணை நோக்கி தங்கள் இரவுப் பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதத்தால் குறிபார்த்தபடியிருந்தார்கள் அவர்களின் குறிக்காட்டிக்குள்ளால் அந்த காவலரணில் இருந்த விமானப்படைச் சிப்பாயின் முகம் தெரிந்தது. ஆனால் அவன் இவர்களைப் பார்க்க மனமில்லாதவன் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாமல் இங்கே அதிவேகமாய் தடை வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வான்படைத்தளத்தின் பாதுகாப்புக் கருதி எதிரி அதிக தடைகளை ஏற்படுத்தி இருந்தான். கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள், கண்ணிவெடிகள் என ஏராளமான தடைகள்.
 
தாங்கள் தளத்தில் பயிற்சி செய்தபடி, பயிற்சியை விடவும் வேகமாக தடையை அகற்றிக்கொண்டிருந்தார்கள். தடையில் மின் பாய்ச்சல் இருக்கின்றதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். குறுகிய நேரத்தில் தடை அகற்றப்படுகின்றது. தடை அகற்றப்பட்டதற்கான சைகையை இளங்கோவிற்கு வழங்க திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் அணிகள் வேகமாக உள்நுழைகின்றன. இப்போது அவர்கள் சாதிப்பது உறுதியாகிற்று. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப் பிரகாசம். தங்கள் நீண்ட கனவு நிறைவேறப் போவதற்கான ஆனந்தச் பூரிப்பு.







An error has occurred. This application may no longer respond until reloaded. Reload 🗙