ஓயாத அலைகள் மூன்று

ஓயாத அலைகள் மூன்று – நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்.!

ஓயாத அலைகள் மூன்று என்பது இலங்கை அரசபடைகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல சண்டைக்களங்களை உள்ளடக்கிய நீண்டகாலச் சமர் நடவடிக்கையாகும். இந்நெடிய சமரில் கட்டம் ஒன்று, இரண்டு என்பன வன்னிப் பெருநிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா அரசபடைகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் ஆகும்.

ஓயாத அலைகள் மூன்று நெடுஞ்சமரில் முதலிரு கட்டங்கள், ஜெயசிக்குறு, ரணகோச-1,2,3,4, றிவிபல போன்ற பல இராணுவ நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புக்களையும், பதினைந்து வருடங்களுக்கு முன்பே சிறிலங்கா அரசபடையினரால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டுச் சிங்களக் குடியேற்றமாக்கப்பட்ட சில நிலப்பரப்புக்களையும் கைப்பற்றும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்து அப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.


யாழ்ப்பாணத்தை அரசபடைகளிடம் இழந்தபின் புலிகளின் தலைமையகமாகவும் முதன்மைத் தளப்பகுதியாகவும் விளங்கியது வன்னிப் பெருநிலப்பரப்பு. அப்பரப்பில் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமை ‘ஓயாத அலைகள் ஒன்று’ என்ற இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றியதன் மூலம் புலிகள் வன்னியை பலம்வாய்ந்த தளமாக ஆக்கிக்கொண்டனர். இலங்கையின் வடமுனையான யாழ்ப்பாணத்தை அரசபடையினர் கைப்பற்றி வைந்திருந்தாலும் அவர்களுக்கு தென்பகுதியுடனான தொடர்புகளனைத்தும் கடல்வழியாக மட்டுமே இருந்தன. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வன்னிப் பெருநிலப்பரப்பும் அதனூடு செல்லும் ஏ-9 அல்லது கண்டிவீதி என அழைக்கப்படும் முதன்மை நெடுஞ்சாலையும் விடுதலைப்புலிகள் வசமிருந்தன.


யாழ்ப்பாணத்துக்கான வினியோகத்தில் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டதால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வரை கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசதரப்பால் ‘ஜெயசிக்குறு’ என்ற பெயரில் மே 13. 1997 அன்று இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து ஆனையிறவு வரையான ஏ-9 பாதையைக் கைப்பற்றுவதே அதன் நோக்கம். அந்நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் போர் புரிந்ததால் வன்னிப்பரப்பில் பல கடுமையான சமர்கள் நடைபெற்றன. அந்நடவடிக்கை மூலம் மாங்குளம் வரையான பாதையை சிறிலங்கா அரசதரப்பினர் கைப்பற்றிக் கொண்டனர்.

பின்னர் டிசம்பர் 5 1998 அன்று சிறிலங்கா அரசபடையினர் ‘றிவிபல’ என்ற பெயரில் நடவடிக்கையொன்றைச் செய்து மாங்குளத்துக்கும் ஏ-9 நெடுஞ்சாலைக்கும் கிழக்குப் பக்கமாகவுள்ள ஒட்டுசுட்டான் என்ற பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அன்றைய தினமே ‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை கைவிடப்படுவதாக சிறிலங்கா அரசபடைத்தரப்பு அறிவித்தது. ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை அமைக்கும் முயற்சியை சிறிலங்கா அரசபடைகள் கைவிட்டதற்கு, விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலும் அதனால் சிறிலங்கா அரசபடைக்கு ஏற்பட்ட இழப்புக்களுமே காரணம் என்று பல இராணுவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

An error has occurred. This application may no longer respond until reloaded. Reload 🗙